arrow_back
Mayanga Solkirathu Manadhu அத்தியாயம் 18
Mayanga Solkirathu Manadhu chevron_right பகுதி 18 / 20

அத்தியாயம் 18

visibility 0
star படைப்பை ரேட் செய்யுங்கள்
சராசரி 5.0/5 (3 மதிப்பீடுகள்)
பகிர்

அத்தியாயம் 18

நான்கைந்து நாட்கள் கடந்து போயிருந்தன. வீடு வழமைக்குத் திரும்பியிருந்தது. அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை என்பதால் எல்லோரும் வீட்டில் இருந்தார்கள். தேவனும் வேலைக்குப் போக ஆரம்பித்திருந்தான். காலையில் கணவன் மனைவி இருவரும் ஒன்றாகக் கிளம்புவார்கள்.‌ அதே போல மாலையும் ஒன்றாகவே வீட்டிற்கு வருவார்கள்.

அன்றைக்கு பரதனின் பிறந்தநாள். பெரியளவில் இல்லை என்றாலும் வீட்டளவில் சின்னதாகக் கொண்டாடுவார்கள். எப்போதும் அப்பா, அம்மா, மகன் என மூவரும் கேக் வெட்டி சந்தோஷப்படுவார்கள். வீட்டிற்கு மருமகள் வந்த பிற்பாடு வரும் முதல் விசேஷம் என்பதால் அன்றைக்கு பரதன் கொஞ்சம் அட்டகாசமாகவே எல்லாவற்றையும் ஆயத்தம் பண்ணினார். மகன், மருமகள், மனைவி என் அனைவருக்கும் புத்தாடைகள் வாங்கிக் கொடுத்தார். எளிமையாகச் சமையலை முடிக்காமல் ஆர்டர் பண்ணினார். அவர்கள் பகுதியில் ஆசிய உணவகங்கள் இல்லை என்பதால் தூரத்திலிருந்து கொண்டுவர ஏற்பாடு பண்ணினார்.

“எதுக்குப்பா இவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்ணுறீங்க? நீங்க இப்பிடியெல்லாம் ஒருநாளும் பண்ணினதில்லையே!”

“எல்லா நாளும் ஒன்னா தேவ்? இந்த பர்த்டேக்கு வீட்டுக்கு மருமகள் வந்திருக்கா, அதைக் கொண்டாட இது ஒரு சந்தர்ப்பம், அவ்வளவுதான்.” அப்பாவின் பதிலில் மகன் சிரித்தான். மனைவியும் அறைக்குள்ளேயே அடைந்து கிடைப்பதால் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவரையும் ஹாலுக்கு அழைத்து வந்தார் பரதன்.

“எதுக்குங்க இந்தத் தேவையில்லாத வேலை?” மனைவி அலுத்துக் கொண்ட போதும் அதைக் கருத்தில் கொள்ளாதவர் தான் விரும்பியதையே செய்தார். எத்தனை நாளைக்கு அந்த வீட்டின் பெண்கள் இருவரும் ஆளுக்கொரு திசையாக இருக்க முடியும்? அவர்கள் இருவருக்குள்ளும் ஒரு நல்ல உறவை உருவாக்கும் பொறுப்பு தனக்கு இருப்பதைப் பரதன் புரிந்து கொண்டார்.

தேவன் வீட்டில் நடக்கும் நாடகத்தை அமைதியாக வேடிக்கைப் பார்த்திருந்தான். எக்காரணம் கொண்டும் வீட்டைவிட்டுப் போகும் முடிவில் அவன் இல்லையே தவிர அதைத் தாண்டி எந்தவொரு காரியத்திலும் இறங்கப் பயப்பட்டான். யார் பக்கம் இப்போது பேசினாலும் அது பாரிய விளைவுகளை உண்டுபண்ணும் என்பதைத் தெளிவாகப் புரிந்திருந்தான்.

மனைவிதான் இப்போதெல்லாம் பெரும்பாலும் வீட்டில் சமைக்கிறாள். பிடிக்காத மருமகள் என்றாலும் அம்மா அதைத்தான் உண்கிறார். எந்தப் பாகுபாடும் காட்டவில்லை என்றாலும் மனதளவில் இந்திராவை மருமகளாக ஏற்றுக்கொண்டாரா என்று மகனுக்குத் தெரியாது. அப்படியே அம்மா ஏற்றுக் கொண்டாலும் நடந்தவற்றை எல்லாம் மறந்துவிட்டு மனைவி அம்மாவுடன் கை கோர்க்கத் தயாராக இருக்கிறாளா என்பதும் தெரியவில்லை.

“தேவ்…” விடிந்ததிலிருந்து மனைவியின் முகத்தைப் பார்த்தபடிதான் இருக்கிறான் கணவன். இப்போது அவளது தயக்கம் எதற்காக என்றும் அவனுக்குப் புரிந்தது.

“இந்திரா…” என்றவன் அவள் தோள்களைப் பிடித்துத் தன் முன்னே நிறுத்தினான். தன் கண்களைப் பார்க்க மறுத்தவளின் கன்னங்களைப் பிடித்துத் தன் கண்களைப் பார்க்கச் செய்தான்.

“யாரும் உன்னை எதுக்காகவும் ஃபோர்ஸ் பண்ணப் போறதில்லை, உனக்குப் புடிக்காத எதுவும் இந்த வீட்டுல நடக்கப் போறதும் இல்லை, எங்கம்மாவோட உனக்கொரு நல்ல உறவு இருக்கணும்னு நான் ரொம்பவே ஆசைப்பட்டேன், ஆனா அது நடக்கலைம்மா, அதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லைன்னு நான் பொய் சொல்லவும் மாட்டேன்.” அவன் தொடர்ந்து பேச அந்த மார்பில் சாய்ந்து கொண்டாள் பெண். எப்போதும் போல இப்போதும் அது அவளுக்கு ஆறுதலையே கொடுத்தது.

“எங்கம்மா கெட்டவங்க கிடையாது இந்திரா, ஆனா உன்னோட விஷயத்துல ஏனோ இப்பிடி நடந்துக்கிட்டாங்க, ரொம்பத் தப்பா நடந்துக்கிட்டாங்க, எனக்காக அவங்களை நீ பொறுத்துக்கணும், மன்னிக்கணும்னு எல்லாம் நான் கேட்க மாட்டேன்.” அந்த ஆறுதலான பேச்சு அவளை நிதானிக்கச் செய்தது. கணவன் இன்னும் பேசினான்.

“மிரிஸ்ஸவில அவங்க உங்கிட்ட நடந்துக்கிட்ட விதத்தை, பேசின பேச்சை என்னாலயே ஜீரணிக்க முடியலை, அதனாலதான் அவங்களுக்குப் புடிக்காதுன்னு தெரிஞ்சும் இந்தக் கல்யாணத்தை நான் நடத்தினேன், எந்த விதத்திலேயும் அவங்களைச் சமாதானம் பண்ணணும்னு நான் நினைக்கலை, ஒருவேளை அவங்க மனசுல இருந்ததை உங்கிட்ட வந்து காட்டாம எங்கிட்ட நிதானமா பேசியிருந்தா அவங்களை நான் கண்டிப்பா சமாதானம் பண்ணியிருப்பேன், அவங்க மனசு மாறுர வரைக்கும் காத்துக்கிட்டு இருந்திருப்பேன், ஆனா அவங்க அப்பிடி நடந்துக்கலை, அதுல எனக்கு ரொம்ப வருத்தம் இருந்துச்சு.”

“பரவாயில்லை தேவ், விடுங்க.”

“இல்லைம்மா, நீ என்னைச் சரியா புரிஞ்சுக்கணும், நிறைய வீடுகள்ல பிரச்சினை எங்க தெரியுமா ஆரம்பிக்குது? பசங்க அம்மாவையும் வொய்ஃபையும் சரியா நடத்துறதில்லை, சமமா பார்க்கிறதில்லை, அது நம்ம வீட்டுல நடக்கக் கூடாது, எனக்கு நீ ரொம்ப முக்கியம், உன்னை நான் எங்கேயும், யாருக்காகவும் விட்டுக்குடுக்க மாட்டேன், அதேநேரம் எங்கம்மா தப்பா நடந்துக்கிட்டாங்க எங்கிறதுக்காக அவங்களை என்னால ஒதுக்க முடியாது, ஒரு மகனா இப்போ நான் அவங்கக்கூட இருக்கணும்.”

“புரியுது தேவ்.”

“யூ எஸ்ல இருக்கும் போது உன்னை நான் வீட்டுக்குப் போகச் சொன்னது நான் இல்லேங்குறதால, அதான் நான் இப்போ வந்துட்டேன்ல, உனக்குப் புடிச்சா நீ இங்க இரு, இல்லைன்னா நம்ம வீட்டுல போய் இருடா, நான் சூர்யாக்கிட்டப் பேசுறேன், நானும் முடிஞ்சப்போ எல்லாம் உங்கூட வந்து இருக்கிறேன், அம்மாக்கு…” அதற்கு மேலும் பேசப்போனவனின் கழுத்தை வளைத்து இழுத்து அந்த இதழ்களில் அழுந்த முத்தம் வைத்தாள் மனைவி.‌

போதும்! இது போதும் அவளுக்கு! தன் உணர்வுகளை மதிக்கும் கணவன். அவளுக்கு எதிராக நிற்பது அவன் அம்மா என்றபோதும் நியாயத்தின் பக்கம் நிற்கும் மனிதன். என் அம்மா அவர்கள், அவர்களுக்காக ஒன்றிரண்டைப் பொறுத்துக்கொள் என்று சொல்லாமல் அவள் உணர்வுகளுக்கு மரியாதைக் கொடுக்கும் நாகரிகம் அவனுக்குத் தெரிந்திருந்தது.

“என்ன… கவனிப்பெல்லாம் பலமா இருக்கு, அன்னைக்கு திவ்யான்னு சொன்னதும் யாரோ ஒதுங்கிப் போனாங்க!”

“அப்போ மட்டுமில்லை, இப்போ அந்தப் பெயரைச் சொன்னாலும் ஒதுங்கித்தான் போவேன், ஆனா இந்தக் கவனிப்பு என்னோட தேவ்க்கு.” என்றவள் மீண்டுமொரு இனிப்பான முத்தம் வைத்தாள். தேவன் கிறங்கிப் போனான்.

மாலை நெருங்கிக் கொண்டிருந்தது. பரதன் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார் என்று பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது. எல்லோரையும் தான் வாங்கிக் கொடுத்த புத்தாடைகளை அணியச் சொன்னார். மருமகளுக்கு அழகான பட்டுப்புடவை வாங்கிக் கொடுத்திருந்தார்.

“எதுக்குங்க இன்னைக்கு இந்தப்பாடு படுத்துறீங்க!” சலித்துக் கொண்டாலும் கணவன் வாங்கிக் கொடுத்த ஆடையை அணிந்து கொண்டார் தாரிணி. அவரால் இப்போது புடவைக் கட்ட முடியாது என்பதால் இலகுவாக அணியக்கூடிய ஆடை வாங்கியிருந்தார்.

“நம்ம வீட்டுக்கு இன்னைக்கு விருந்தாளிங்க வர்றாங்க தாரிணி.”

“விருந்தாளிங்களா? அது யாரு?!”

“வந்ததும் நீயே தெரிஞ்சுக்கப் போறே.” என்றவர் அதற்குமேல் எதுவும் பேசவில்லை. சற்று நேரத்தில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என சிலர் வந்தார்கள். பத்துப் பதினைந்து ஆட்கள் இருக்கும். அப்பா எந்தத் திட்டமிடலும் இல்லாமல் இப்படி ஆட்களை அழைக்கமாட்டார் என்பதால் மகன் கவலைப்படவில்லை.

“என்னப்பா இன்னைக்கு எல்லாமே வித்தியாசமா இருக்கு?!”

“தேவா… உங்கக் கல்யாணம் நடந்தப்போ அதுல தாரிணிக்கு விருப்பம் இல்லைன்னு நிறையப் பேருக்குத் தெரிஞ்சு போச்சு, நமக்கிட்ட மரியாதை இல்லைன்னு விசாரிக்கலையே தவிர மத்தபடி தெரிஞ்சிருச்சு, ஆனா நிலைமை இப்போ அப்பிடியில்லை, எனக்குத் தெரிஞ்சு உங்கம்மா மனசு மாறியிருக்கு, நம்ம வீடு பழையபடி மாறியாச்சு, அதை எல்லாருக்கும் நாம தெரியப்படுத்த வேணாமா? அதுக்குத்தான் இந்த ஏற்பாடு.”

“சரிப்பா.” வாய் சொன்னாலும் தேவனின் மனது அப்பாவின் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டாரோ என்றுதான் தோன்றியது. அம்மாவின் அமைதியை அப்பா சம்மதம் என்று எடுத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் மகனுக்கு அப்படி விளங்கவில்லை.

“தாரிணி, தேவராஜ் வந்திருக்கான்.” மனைவியிடம் உற்சாகமாக வந்து சொன்னார் கணவர். இந்த தேவராஜ், பரதனின் நெருங்கிய நண்பர். நீண்டநாள் சினேகம். ஆனால் தேவனின் திருமணத்தின் போது வேலை விஷயமாக வெளிநாடு சென்றிருந்ததால் மனிதரால் வர முடியவில்லை. அதனால் இப்போது பெரிய பரிசுப் பொருளோடு வந்திருந்தார்.

“வாங்கண்ணா.”

“எப்பிடிம்மா இருக்கே தாரிணி? உடம்பு இப்போ சௌக்கியமா?”

“பரவாயில்லைண்ணா, ரீஷ்மா வந்திருக்காளா?”

“ஆமா, வந்திருக்கா.” என்றவர் பரதனோடு பேச ஆரம்பித்தார். எல்லோரும் ஹாலில் அமர்ந்தார்கள். ரீஷ்மா இவரது பெண். மனைவி ஏற்கனவே தவறியிருந்தார்.

“இந்திரா… இந்திரா…” சத்தமாக மாமனார் அழைக்கவும் தங்களின் அறையிலிருந்து அவசரமாக வெளியே வந்தாள் பெண். அடர் பின்க் நிறத்தில் தங்க நிற பார்டர் வைத்த புடவை. அதே பின்க் நிறத்தில் ப்ளவுஸ்.‌ தோட்டத்தில் பூத்திருந்த இரண்டொரு ரோஜா மலர்களைக் கொண்டையின் ஓரமாக சொருகியிருந்தாள். விருந்தினர்கள் வருவார்கள் என்று சொல்லியிருந்ததால் இலேசான ஒப்பனையோடு மெல்லிய நகைகளும் அணிந்திருந்தாள் பெண்.

“வாவ்! யாரிந்த தேவதைன்னு நான் இப்போ பாட்டுப் பாடணுமா பரதா?” தேவராஜ் படு கலாட்டா பேர்வழியாக இருந்தார். ஆனால் வரவேற்பறையில் தாரிணியும் அமர்ந்திருந்ததால் இளையவளால் அந்த இனிமையான பாராட்டை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

“ஹா… ஹா…‌ எப்பிடி என்னோட மருமகள் ராஜ்? நீ தாராளமா பாடலாம், ஏன்னா இவதான் எங்க வீட்டு தேவதை.”

“அடடா! உங்க வீட்டு இளவரசன் இந்த தேவதை கையைப் புடிச்சதை என்னால பார்க்க முடியாம போச்சே!”

“அதனால என்ன? இப்போ பார்த்துட்டா போச்சு!” பேச்சு சுவாரஸ்யமாக போய்கொண்டிருக்கும் போது தேவன் அறையிலிருந்து வெளியே வந்தான். வேட்டி சட்டையில் படு கம்பீரமாக இருந்தான்.

“வாங்க புது மாப்பிள்ளை! ரூமைவிட்டு வெளியே வர இவ்வளவு நேரமா? நடத்துங்க நடத்துங்க!”

“வாங்க மாமா.” முகம் சிவக்கப் பதில் சொன்னான்.

“அப்புறம், கல்யாண வாழ்க்கை எப்பிடிப் போகுது? அமெரிக்கா காரனுக்கு உங்க மேல அப்பிடியென்ன கோபம்? இப்பிடி சதி பண்ணிட்டான்?” என்றவர் அந்த இடமே அதிர சிரித்தார்.

அறையை விட்டு வெளியே வந்ததிலிருந்து இந்திரா முள்ளில் இருப்பது போல்தான் அமர்ந்திருந்தாள். தேவராஜ் கலகலப்பாகப் பேசினாலும் கூட அழைத்து வந்திருந்த பெண்ணை அவளுக்கு யாரும் அறிமுகம் செய்து வைக்கவில்லை. அந்தப் பெண்ணும் தாரிணியோடு அளவளாவிக் கொண்டிருந்ததால் இவளால் அணுக முடியவில்லை. தாரிணி இருக்கும் இடத்தில் இருப்பதையே அசௌகரியமாக உணர்ந்தாள்.

“தேவன், உங்க வொய்ஃபை நீங்க எனக்கு அறிமுகம் செய்யவே இல்லையே!” தாரிணியுடனான பேச்சை நிறுத்திவிட்டு அந்தப் பெண்ணே பேச்சை ஆரம்பித்து இந்திராவின் கவனத்தைக் கவர்ந்தாள்.‌ தேவனை எல்லோரும் ‘தேவ்’ என்றுதான் அழைப்பார்கள். ஏன்? நிதிலா கூட அப்படித்தானே அழைத்தாள். ஆனால் எந்த உரிமையும் எடுத்துக் கொள்ளாமல் தேவன் என்று இவள் விளித்தது பெண்ணுக்குப் பிடித்திருந்தது.

“சாரி ரீஷ்மா, நான் மாமாவோட பேசிக்கிட்டு இருந்ததுல அதை மறந்துட்டேன்.”

“ஆஹா! யாரை மறந்தாலும் கட்டின வொய்ஃபை மறக்கலாமா?” அந்தப் பெண் தன்னையே மையப்படுத்திப் பேசியது இவளுக்குப் பிடித்திருந்தது. இந்த வீட்டிற்கு வந்த நாளிலிருந்து இந்திரா தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாள். உரிமையுள்ள இடம் என்று தெரிந்திருந்தாலும் அந்த உரிமையை எடுத்துக்கொள்ள ஏதோவொன்று தடுத்தது. அந்த நிலை இப்போது இலேசாக மாறியது போல உணர்ந்தாள்.

“மீட் மை வொய்ஃப் இந்திரா, இது ரீஷ்மா, தேவராஜ் மாமாவோட பொண்ணு.” முறையான அறிமுகம். ஆனால் அந்தப் பெண்ணின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி கண்களை எட்டவில்லையே!

“எங்கப்பாவும் உங்க மாமாவும் பல வருஷ சினேகிதர்கள், ரொம்ப நாள் பழக்கம், அதால மாமான்னுதான் கூப்பிடுவோம்.”

“ஓ… கல்யாணத்துக்கு நீங்க வந்திருந்தீங்களா? உங்களைப் பார்த்த ஞாபகம் இல்லையே?!”

“சாரி இந்திரா, உங்க வெட்டிங் டைம்ல அப்பா ஊருக்குப் போயிருந்தாங்க, எனக்கும் ஹாஸ்பிடல்ல லீவ் எடுக்க முடியலை, சரி… ஆறுதலா அப்பா வந்ததுக்கு அப்புறமா உங்க வீட்டுக்கே வந்து பார்க்கலாம்னு நினைச்சோம்.”

“அப்பிடியா?”

“கல்யாணம் முடிஞ்ச கையோட தேவனும் அமெரிக்கா போயிட்டதா அப்பா சொன்னாங்க, இன்னைக்குத்தான் வர முடிஞ்சுது.” பேச்சு இவளோடு இருந்தாலும் பார்வை அடிக்கடி தேவனை ஒரு ஏக்கத்தோடு தழுவியது போல இருந்தது.

அதன்பிறகு இன்னும் பல விருந்தினர்களும் வந்தார்கள். ரீஷ்மா இவளோடு நன்றாகப் பழகினாள். தாரிணியோடு அவ்வப்போது சென்று பேசினாலும் அதிக நேரத்தை இந்திராவோடுதான் செலவழித்தாள். டாக்டராக இருக்கிறாளாம். பேச்சு பெரும்பாலும் தேவனைப் பற்றியதாகவே இருந்தது. அது இந்திராவிற்கும் பிடித்திருந்தது. ஆனால் பேசுபவளின் கண்களிலும் குரலிலும் ஓர் ஏக்கம் இழையோடுவதை இவளால் உணர முடிந்தது.

“அப்புறம், டாக்டர் எப்போ கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க?” பிறந்தநாள் ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் நிறைவு பெற்றிருந்தன. பெண்கள் இருவருக்குள்ளும் ஓர் நெருக்கம் உருவாகி இருந்தது.

“என்ன அவசரம்? ஆறுதலா பண்ணிக்கலாமே.”

“டாக்டர் மனசுல யாராவது இருக்காங்களா என்ன?” அந்தக் கேள்வியில் ரீஷ்மாவின் கண்கள் அலைபாய்ந்தன.

“அப்பிடியெல்லாம் ஒன்னுமில்லை இந்திரா.” வாய் சொன்னாலும் ஒரு நொடி அந்த அறையிலிருந்த தேவனின் புகைப்படத்தைத் தழுவிச் செல்ல இந்திராவிற்கு ஊர்ஜிதமாகிப் போனது.

“உங்களுக்கு தேவன் மேல ஒரு அபிப்பிராயம் இருந்துச்சா டாக்டர்?” சட்டென்று கேட்டுவிட்டாள். ரீஷ்மா அளவுக்கு அதிகமாகத் தடுமாறுவது வெளிப்படையாகவே தெரிந்தது.

“ஐயையோ! அப்பிடியெல்லாம் ஒன்னுமில்லை…” இவள் பார்த்த பார்வையில் ரீஷ்மாவின் பேச்சு பாதியிலேயே தடுமாறியது. இப்போதும் இந்திரா தன்னெதிரில் அமர்ந்திருப்பவளையே பார்த்திருந்தாள். நீ பதில் சொல்லாமல் நான் விடப்போவதில்லை என்பது போல இருந்தது அந்தப் பார்வை.

“எனக்கு மட்டும் அபிப்பிராயம் இருந்து என்ன பண்ணுறது? ரெண்டு கையும் தட்டினாத்தானே ஓசை வரும்?”

“ஓ… தேவன் உங்களை மறுத்துட்டாரா?” அப்படி மாத்திரம் தன் கணவன் செய்திருந்தால் அவனைப் போல முட்டாள் வேறு யாரும் இருக்க முடியாது என்று இந்திராவின் நியாயமான மனது சொன்னது.

அழகான பெண். டாக்டருக்குப் படித்திருக்கிறாள். நடை, உடை, பாவனைகளை வைத்துப் பார்க்கும் போது வசதியான வீட்டுப் பெண் என்பது சொல்லாமலேயே புரியும். பழகுவதற்கும் இனிமையாக இருக்கிறாள். தேவராஜன் தனக்கு வரும் மாப்பிள்ளையை உள்ளங்கையில் வைத்துத் தாங்குவார் என்பதை யாரும் சொல்ல வேண்டியதில்லை. அப்படியிருக்க தேவன் ஏன் இந்தப் பெண்ணை வேண்டாம் என்று சொன்னான்?!

“இதையெல்லாம் தெரிஞ்சு இப்போ என்ன பண்ணப் போறீங்க இந்திரா?”

“ஏன்? என்னோட புதிய தோழிக்கு நானே ஒரு மாப்பிள்ளை பார்க்கலாமில்லையா?”

“கண்டிப்பா பாருங்க, நீங்க பார்த்தா அது எனக்குக் கண்டிப்பா புடிக்கும், அப்பாவும் கூடிய சீக்கிரமே கல்யாணம் பண்ணுன்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க.” சட்டென்று தன் கையைப் பிடித்துக் கொண்டு பேசிய பெண் இந்திராவின் வயிற்றில் பாலை வார்த்தாள். எங்கே இந்தப் பெண் தேவனை மனதில் நினைத்துக் கொண்டு அவள் வாழ்க்கையைப் பாழடித்துக் கொள்வாளோ என்று இவள் பயந்து போனாள். அப்படி ஏதாவது நடந்தால் இவளால் அதைத் தாங்கியிருக்க முடியாது.

“சாப்பிடலாமா ரீஷ்மா?” அதன்பிறகு பெண்கள் இருவரும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். மிகவும் நெருக்கமான தோழிகளாக ஆகிப்போயிருந்தார்கள். அந்த வீட்டில் அன்றைக்கு எல்லோரையும் போல மிகவும் சாதாரணமாக உலவியது போல உணர்ந்தாள் இந்திரா. தாரிணி என்ற பெண்மணி இருக்கும் அதே வீட்டில் தன்னால் இவ்வளவு சுதந்திர மனப்பான்மையுடன் உலாவ முடியும் என்று நினைத்திருக்கவில்லை. அதற்குக் காரணம் ரீஷ்மா. ஏனோ அந்தப் பெண்மேல் அளவுகடந்த பாசம் உருவானது. அந்தப் பெண்ணின் கண்களில் தெரிந்த ஏக்கம் இவளை அசைத்துப் பார்த்தது.

“வாங்க மேடம், இப்பவாச்சும் உங்களுக்கு என்னோட ஞாபகம் வந்துச்சே!” அன்றிரவு விருந்தினர்கள் அனைவரும் கலைந்து போன பிற்பாடு அறைக்குள் வந்த மனைவியை வரவேற்றான் தேவன். அடர் பின்க் நிற புடவை அவள் நிறத்துக்கு படு எடுப்பாக இருந்தது. கூந்தல் இலேசாகக் கலைந்து கொண்டையில் வைத்திருந்த ரோஜா மலர்கள் வாடிப்போயிருந்தன.

“ரோஜா வாடிப்போயிருச்சு, ஆனாலும் என்னோட  தாமரை மலர்ச்சியாத்தான் இருக்கு.” சரசம் பண்ணியவன் அவள் தாமரை முகத்தில் முத்தம் பதித்தான். காய்ந்த மலர்களை அகற்றிவிட்டு கொண்டையைக் கலைத்துவிட்டான்.

“தேவ்…”

“ம்…”

“ரீஷ்மா ரொம்ப நல்ல பொண்ணில்லை?” அவள் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தாள்.

“அடி வாங்கப் போறே! இவ்வளவு நேரமும் இது பூலோகமா சொர்க்கமான்னு தெரியாம ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசினது போதாதுன்னு இப்பவும் அவ பேச்சு எதுக்கு?”

“தேவ்…” தன் கழுத்து வளைவில் முகம் புதைத்து சரசம் பண்ண ஆரம்பித்த கணவனை அவள் பேச்சு தடுத்தது.

“தேவ்…‌ ரீஷ்மாக்கு உங்க மேல ஒரு அபிப்பிராயம் இருந்துச்சா?”

“இந்திரா! என்னப் பேச்சிது?!” அவன் குரலில் கோபம் தெரிந்தது.

“ப்ளீஸ் தேவ், எனக்குப் பதில் சொல்லுங்க, அவங்களுக்கு உங்க மேல ஒரு அபிப்பிராயம் இருந்தது உங்களுக்குத் தெரியுமா இல்லையா?”

“தேவராஜ் மாமாவை இன்னைக்கு நேத்தில்லை, பல வருஷங்களா தெரியும், ஒன்னா வளர்ந்திருக்கோம், அப்பிடியெல்லாம் எந்த எண்ணமும் வந்திடாது இந்திரா.”

“ஆனா…”

“ஆமா, ஆனா ஆவன்னான்னு நீ எல்லாம் பேசுவடி! உன்னோட இஷ்டத்துக்கு எல்லாம் நான் ஆடுறேன் பாரு, அதால நீ என்னைக் கவனிக்காம ஊர் உலகத்துல இருக்குற எல்லா பிரச்சினையையும் அள்ளிக்கிட்டு வருவே! தப்பு எம்மேலதான்.” என்றவன் அவள் சேலையில் கை வைத்தான்.

“தேவ்…” அதற்கு மேல் தேவன் மனைவியைப் பேச அனுமதிக்கவில்லை. அன்றைக்கு முழுவதும் அழகோவியம் போல வீடு முழுவதும் வளைய வந்தவள் அந்த நொடி அவனுக்கு வெகுவாகத் தேவைப்பட்டாள். வேறெந்த நினைவுகளும் அவளுக்கு வராத வண்ணம் அந்த இரவைக் கடத்த அவனுக்குத் தெரிந்திருந்தது. இரவும் உறவும் இனித்தாலும் பெண்ணின் மனதுக்குள் மெல்லிய சோகமொன்று இருக்கத்தான் செய்தது.

அடுத்தநாள் காலை விடிந்ததிலிருந்து இந்திராவின் மனது அலைபாய்ந்த படியே இருந்தது. ஏதோவொரு சஞ்சலம் அவள் மனதை அலைக்கழித்தது. சொல்லத் தெரியாத சோகமொன்று நெஞ்சைப் பிசைந்தது. சம்பந்தமே இல்லாமல் ரீஷ்மாவின் முகம் அடிக்கடி மனக்கண்ணில் தோன்றி மறைந்தது. அந்தப் பெண்ணின் ஏக்கம் நிறைந்த கண்கள் இவளை வாட்டி வதைத்தது.

“இந்திரா, ஆஃபீஸ் முடிஞ்சதும் கால் பண்ணு, எனக்குக் கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேலை இருக்கு, கூடிய சீக்கிரமே அதை முடிக்ககப் பார்க்கிறேன்.”

“ம்…” ஏதோ சிந்தனையில் இருந்தபடி பதில் சொன்ன மனைவியை தேவனும் கவனிக்கவில்லை. இருவரும் ஆஃபீஸ் போய்க்கொண்டிருந்தார்கள். மனைவியின் நடத்தையில் தெரிந்த மாற்றத்தைக் கவனிக்கத் தவறியிருந்தான் கணவன்.

மாலை நான்கை நெருங்கியிருந்தது. வேலைகள் பெருமட்டிற்கு நிறைவடைந்திருக்க மனைவியை அலைபேசியில் அழைத்தான் தேவன். ஆனால் பதில் இருக்கவில்லை. வேலைப்பளு அதிகம் போலும் என்று நினைத்தவன் மீண்டும் அரைமணி நேரம் கழித்து அழைத்தான். அப்போதும் அவள் அழைப்பை ஏற்கவில்லை.

“என்னாச்சு இவளுக்கு?! அவ்வளவு பிஸியா என்ன?!” என்று வாய்விட்டுப் புலம்பியவன் அவன் ஆஃபீஸுக்கு வந்திருந்தான். நேரம் மாலை ஐந்தைத் தாண்டியிருந்தது. ஆனால் அங்கு இந்திரா இல்லை. நான்கு மணிக்கு முன்பாகவே இந்திரா ஆஃபீஸிருலிந்து கிளம்பிவிட்டாள் என்று அறிந்தபோது திகைப்பாக இருந்தது. ஏங்கே போய்விட்டாள் இந்தப் பெண்?!

“சூர்யா, இந்திரா அங்க வந்தாளா?”

“இல்லையேண்ணா, என்னாச்சு? ஏதாவது ப்ராப்ளமா?”

“ஒன்னும் புரியலைடா, ஆஃபீஸ் முடிஞ்சு வழமையான நேரத்துக்கு வந்தா இங்க அவ இல்லை, கிளம்பிட்டாளாம், எங்கிட்ட ஒரு வார்த்தைச் சொல்லலை.”

“மத்தியானம் எனக்கு கால் பண்ணினா, கொஞ்சம் மூட் அவுட் ஆன மாதிரித்தான் தெரிஞ்சுது, நேத்து வீட்டுல மாமாவோட பர்த்டே பார்ட்டின்னு சொன்னா, ஏதாவது மனஸ்தாபமா இருக்கும்னு நானும் அலட்டிக்கலைண்ணா.”

“அப்பிடி எதுவும் நடக்கலையே சூர்யா, ஹேப்பியாத்தானே இருந்தா, காலைல கூட நல்லாத்தானே இருந்தா.”

“அத்தையோட… ஏதாவது…”

“சீச்சீ! அதெல்லாம் ஒன்னுமில்லைடா, ஆரம்பத்துல பார்ட்டின்னதும் கொஞ்சம் பின்வாங்கினா, ஆனா தேவராஜ் அங்கிள் அவர் பொண்ணோட நேத்து வந்திருந்தாரு, அப்பாவோட பெஸ்ட் ஃப்ரெண்ட், ரெண்டு பேரும் நல்லா உட்கார்ந்து அரட்டை அடிச்சாங்க…” பேசிக்கொண்டு போகும்போதுதான் ரீஷ்மாவைப் பற்றி நேற்றிரவு மனைவி ஏதோ பேசியது நியாபகம் வந்தது.

“ஏன்டா சூர்யா இவ முட்டாள் மாதிரி பண்ணுறா? எனக்கு ஆத்திரமா வருதுடா!”

“என்னாச்சுண்ணா?” என்றவனிடம் நேற்று நடந்தவை அனைத்தையும் ஒப்புவித்தான் பெரியவன். இப்போது இளையவன் வாய்விட்டுச் சிரித்தான்.

“இந்த பெட்ரோமாக்ஸ் லைட்டுத்தான் வேணும்னு நின்னீங்கல்லை? நல்லா படுங்க, அவ அப்பிடித்தான், சின்ன விஷயத்துக்கு எல்லாம் சம்பந்தமே இல்லாம டென்ஷன் ஆவா, இல்லைன்னா உங்கம்மா பார்த்த வேலைக்கு உங்களைத் தண்டிப்பாளா? நியாய, அநியாயம் ரொம்பப் பார்ப்பா.”

“அதுக்காக? இப்ப என்ன பண்ணப் போறாளாம்? அந்த ரீஷ்மாக்கு என்னைத் தாரை வார்க்கப் போறாளாமா?”

“செஞ்சாலும் செய்வா, நம்ப முடியாது.” சூர்யா மேலும் சிரிக்க இவனுக்கு அப்படியொரு கோபம் வந்தது. பல்லைக் கடித்துக் கொண்டான்.

“இன்னைக்கு இருக்கு அவளுக்கு!” சூளுரைத்தபடி வாடகைக்கு எடுத்திருந்த வீட்டிற்கு அந்த ப்ளாக் ஆடியை விரட்டினான் தேவன். ஒருவேளை தங்கள் வீட்டிற்குப் போயிருப்பாளோ?

“அப்பா, இந்திரா அங்க வந்தாளா?”

“இல்லையேப்பா, என்னாச்சு?”

“ஒன்னுமில்லைப்பா, எங்க வீட்டுக்குப் போயிருக்கா போல, நான் என்னன்னு பார்க்கிறேன்.”

“சரிப்பா, நைட்டுக்கு வீட்டுக்கு வந்திருவீங்கல்லை?”

“வந்திருவோம்பா, ஒன்னும் கவலைப்படாதீங்க.”

“சரி தேவ், ஆத்திரப்படாம அமைதியா மருமகக்கிட்டப் பேசு.” கணவன் மனைவிக்குள் ஏதோ மனஸ்தாபம் என்று அப்பா புரிந்து கொண்டார். அந்த ப்ளாக் ஆடியை விரட்டிக் கொண்டிருந்தான் தேவன்.

அடுத்த அத்தியாயம்

அத்தியாயம் 19

அத்தியாயம் 19தேவனுக்கு உண்மையிலேயே கோபம் வந்தது. எதற்காக இந்தப் பெண் இப்போது இப்படி நடந்து கொள்கிறாள்?! ஆஃபீஸிலிருந்து சீக்கிரமாக வீடு செல்வதென்றால் தனக்கொரு தகவல் தர முடியாதா? இங்கே போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போவதற்கென்ன?!"இந்திரா..." வீட்டிற்குள் நுழைந்ததும் இவன் குரல் ஓங்கி…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

forum 2 கருத்துகள் உள்ளன

உங்கள் கருத்தைப் பகிருங்கள்